Saturday, October 7, 2017

பழையோர் கலை

இது
சனங்களின் தர்மம்!
சாத்திரங்களும்,
சம்பிரதாயங்களும்,
உருப்போடப்பட்டு
வாழ்வின் ஒவ்வொரு
செயலையும்,
அதன் மேலேயே
கட்டமைத்து
சென்று கொண்டேயிருக்கிறது..

இங்கு
சனங்களின்
இனங்களுக்கு அளவேயில்லை!
அது போலவே,
சம்பிரதாயங்களுக்கும்
இனதிற்கொன்று, வீட்டிற்கொன்று!
உருவாக்கியவனைத்
தெரியாது!
உலவவிட்டவனைத்
தெரியாது!
ஆனால் உயிர் போல
மெய்ப்பித்திருக்கிறது!

இச்சாத்திரங்களும்,
சம்பிரதாயங்களும்
இல்லையென்றால்
தம் வாழ்வே
வீணென்று நினைப்பவர்கள்..
ஏன் செய்ய வேண்டும்?
எதற்க்காக நிகழ்த்தல்
வேண்டும்?
காரணம் கூற இயலாது,
இந்த
தர்மங்களின் சனத்திற்கு..!

அவற்றிற்கு
பழகியவர்களும்
பழகியவற்றைக்
கட்டைபிடிகிக்கிறோம்
என்பவர்களுமே கோடி கோடியாய்
இருக்கும் தர்மம்!

தங்கள்
பழையோர் சமைத்த
வரலாற்றுப் பொக்கிஷங்கள்!
கற்பனையைக் கல்லின்
மேலேற்றி  காலங்கள்
பல கடந்த அற்புதங்கள்!
உளியினால்
புனையப்பட்ட
மீளுருவாக்கம் செய்யவே முடியாத
விலைமதிப்பில்லா
வரலாறுகள்...!
இவைகள் கடல் கடந்து
சிறையெடுத்துச் செல்லப்படுவதை
உணராமலிருக்கிறார்கள்.
தொன்மங்களைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துச்
சம்பிரதாயங்களுக்கும்
கணக்கு வைத்திருக்கும்
இவர்களிடம்
கலைகளைப் பற்றிய
கணக்கு மட்டும் இல்லை .

உன்னை
வேண்டாமென்கிறார்கள்!
உன் தர்மத்தை
தள்ளி வைக்கிறார்கள்
அயல் நாட்டார்!
ஆனால் உன்
பழையோர்  கலை மட்டும்
வேண்டுமென்கிறார்கள்!
உனக்குப்
புரியவில்லையா ?..











Wednesday, July 26, 2017

ஒரு கோப்பைக் கடவுள்

கடலை (கடவுளை)
ஒரு
கோப்பையில் 
எடுத்து
ஊர் போய்க் 
காட்டினான்
சாமியார்...
கடல் (கடவுள்)
பார்க்காத 
ஜனங்களோ 
அக் கோப்பையை  
எட்டி எட்டி 
பார்த்தார்கள்.. 
இது தான்
கடலோ (கடவுளோ)
என்று...!
ஏதுமறியா ஒரு
சிறுவன் 
எட்டி பார்த்துச் 
சொன்னான்....
ஓ .... கடலுக்குள் (கடவுளுக்குள்)
நானே  தெரிகிறேன்!... 

Thursday, July 20, 2017

பசியும், படைப்பும்


பசியும் படைப்பவனும்
சமம்
இரண்டுக்குமே  நல்ல
படையல் வேணும்..

ஒருத்தன் ஆடு வைப்பான்...
இன்னொருவன்   அப்பம் வைப்பான்..
வேறொருத்தன்  பொங்க வைப்பான்..

வித  விதமாச் சாப்பிட்டா பசியாறும்..
வித விதமாப் படைச்சா பக்தியாறும்..

பசி இரைப்பையில் தோன்றுது
பக்தி இறைவனில் தோன்றுது

உலகப் பொதுவுடமையில்
பக்தியும், பசியும் ஒண்ணு
இதில்
எது
விஞ்சியது ?..





Wednesday, July 19, 2017

பொக்கிஷம்

"பத்து வைரங்கள்"
இரண்டு
"தங்கத்  தூண்களில்"
பூட்டப்பட்டுள்ளன...
ஆகா!
எனது  "கைகள்".
ஏன் முடியாதா
இந்தக் கைகளால்?
மேற்ச்சொன்னவைகளை
உருவாக்க...!!

கால விரயர்கள்

மணித் துளிகளைத்
தண்ணீராய்ச் 
செலவிடும் 
பரோபகாரிகள்...

இவர்கள் இட்ட 
நேர  தானத்தில்
செழித்துக் கொழிக்கிறார்கள் 
இந்த
ஊர்ச் சினிமாக்காரர்கள் ..
சின்னத்திரை வியாபாரிகள்..

பரவாயில்லை 
உங்கள் 
கருணையுள்ளம்..
எவருக்கும்
அரிதாய்த் 
தெரியும்  காலத்தையே 
கொடையாய்க்  கொடுக்கிறீர்கள்
பலருக்கு......



நல்ல நேரம் பார்க்காமல் 
இவர்கள் எதையும் 
செய்வதில்லை
பஞ்சாங்கம் பார்க்காமல் 
பயணப் படுவதில்லை..

எதையும் கணக்குப் பார்க்காமால்
செய்வதில்லை

ஆனால்

காலத்தை வீணடிப்பதைக்
மட்டும்?.

காவிரி


காக்கை
வடித்ததாம்
காவிரி...
காக்கைக்கு
இருக்கும்
அறிவு கூட.....

Tuesday, July 18, 2017

விவசாயம்

பச்சை சாயம்
பூசிய..
விவசாயம்
இப்போது
இரத்த சாயம்
பூசியிருக்கிறது..


உழவர்கள்

நாடெங்கும்
முதியோர்கள்
காப்பகம்...
எங்கே?
உழவர்கள்
காப்பகம்..


இன்னொரு உழவன்

இப்போதைய
உழவர்களெல்லாம்
கிழவர்களாய்ப்  போனால்
இன்னொரு உழவன்
கிடைக்கப் போவதில்லை....




சிறுகதை : மௌன சாட்சி


     மாலை 5.25 மணி, இன்னும் சில நிமிடங்களில் எனக்கு கண் தெரிய ஆரம்பித்து விடும். என்னுடைய இன்றைய வாழ்க்கை அப்போதுதான் தொடங்கும். சில சமயம் இதை நினைத்து சிரித்துக் கொள்வேன்; எல்லோருக்கும் மாலைக் கண்  என்றால் இரவிலே கண் தெரியாது, ஆனால் அந்தநேரத்தில்தான்  எனக்கு மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்!.

      சுமார் 6.00 மணியளவில் என் கண்களுக்கு வெளிச்சம் வந்துவிட்டது. நான் அந்த வீதியின் ஒரு ஓரத்திலே எப்போதும் நின்று கொண்டிருந்தேன். இப்போது அவ்வீதி முழுவதும் எனக்கு தெரிய ஆரம்பித்தது, அந்த பகுதி முழுவதும்  மிகவும் கலகலப்பாக இருந்தது. இன்று செவ்வாய்க்கிழமை ஆதலால் வீதி முழுவதும் கடை பரப்பிக் கொண்டிருந்தார்கள், அன்று சந்தை கூடும் நாள். பலவிதமான மக்களும் அங்கு வருவார்கள், அதை எதிர்பார்த்து பொருட்களும், வண்ணமயமான காய்கறிகளும்,பழங்களும் குவிந்திருந்தன. குழந்தைகள், முதியவர்கள், இளம்பெண்கள், கணவன், மனைவி ஜோடிகள், அவர்களின் கலகலப்பான பேச்சுகள், கடைக்காரர்களின் கூச்சல்கள் என களேபரமாய் இருக்கும். இவையனைத்தையும் ஆசையுடன் என் பார்வையால் அள்ளி விழுங்க தொடங்கினேன். 

      இரவு 9.00 மணிக்கு மேல் மெதுவாக கூட்டம் கலையத் தொடங்கியது. எனக்கு சிறிது சிறிதாக சோகமும் கூடியது. சுமார் 10.00 மணிக்கு சந்தை கலைந்து விட்டது. சிறிது நேரத்தில் அந்த வீதி மயான அமைதிக்கு திரும்பியதாக எனக்குத் தோன்றியது. ஒருசில தெரு நாய்கள், இல்லை இல்லை இரவு முழுவதற்க்குமான என் நண்பர்கள் அவர்கள், அங்கும் இங்கும் ஒரு விதமான உற்சாகத்துடன் திரிந்து கொண்டிருந்தார்கள். சில சமயம் என் பார்வையிலிருந்து விலகிச் செல்லும் அந்த நாய்கள் கடைசியாக என்னிடம் நெருங்கி வந்து, என் பார்வை வெளிச்சத்தில் சுகமாக படுத்துக் கொண்டன.

      இது ஒரு மழைக்காலம், சில வண்டுகளும், பூச்சிகளும் என்னருகே வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன. சந்தை குப்பைகளும், கழிவுகளாலும் நிறைந்திருந்தது. அந்த அழுக்கு வீதியை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மழைப் பூச்சிகள் என் பார்வையை மறைக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தன.

      12.35 மணி நடு இரவு. என் பார்வை வெளிச்சம் அந்த வீதியின் முக்கு வரை மட்டுமே நீண்டது. அதற்க்கு மேல் என்னால் பார்வையை செலுத்த இயலவில்லை. சிறிது நேரத்தில் இருட்டிலிருந்து ஓலமும், சில பேர் ஓடி வரும் சத்தமும் கேட்டது. சில நிமிடங்களில் அந்த மனிதர்கள் என் பார்வைக்கு தெரிய ஆரம்பித்தார்கள். ஒருவன் முன்னால் ஓடி வந்து கொண்டிருந்தான், அவனின் ஓலம் தான் அதிகமாகக் கேட்டது. நாலைந்து மனிதர்கள் கொலை வெறியுடன் துரத்தி வந்தார்கள். முன்னால் ஓடி வந்த அவன் எனக்குக் கீழே வரும் போது கல் தடுக்கி கீழே விழுந்தான். அங்கிருந்த நாய்கள் எழுந்து குரைக்க ஆரம்பித்தன. துரத்தி வந்தவர்களைப் பார்த்து நாய்கள் பயந்து சத்தமிட்டுக் கொண்டே இருளில் பாய்ந்து மறைந்தன. தற்போது அந்த மனிதர்களையும், என்னையும் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை.

      நான் அந்த சம்பவத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். கீழே விழுந்தவனுக்கு சுமார் முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும, தாக்க வந்தவர்கள் மிகவும் இள வயதுடையவர்கள், அவர்களுக்கு பதினெட்டிலிருந்து லிருந்து இருபதிற்க்குள் தான் இருக்கும்.அவர்களை என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. அச் சிறுபையன்களின் கையில் கட்டை மற்றும் கல் மட்டுமே இருந்தது. அவர்கள், அவனை அந்த ஆயுதங்களை கொண்டே சரமாரியாக தாக்க ஆரம்பித்திருந்தார்கள். கீழே இருந்தவன், கெஞ்சினான், திமிறினான் அவர்கள் விடுவதாக இல்லை. இரத்தம் சிறிது சிறிதாகப் பெருகி அந்த வீதி சாலை முழுவதும் பரவியது. அவன் துள்ளிக் கொண்டிருந்தான், வந்தவர்கள் அவனை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்கள்.

      1.45 நடுநிசி, அந்த சம்பவம் நடந்து முடியும் போது. துள்ளிக் கொண்டிருந்தவனின் துடிப்பு மெல்ல மெல்ல அடங்கியிருந்தது. நான் சலனமின்றி பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு நாய் மட்டும் வந்து அவனையும், குறுதியையும் நுகர்ந்து பார்த்து விட்டு, சிறிது குரைத்து, என் கீழே படுத்துக் கொண்டது. இப்போது நானும், நாயும், அவனும் மட்டுமே இருந்தோம்.

      அதிகாலை 4.15 மணி. பச்சை ஸ்கூட்டரில் தெற்கிலிருந்து வரும் பால்க்காரர், அந்த அண்ணாச்சி கடையருகே வரும் போது என் கண்ணில் பட்டார். நாய் எழுந்து குரைக்க ஆரம்பித்தது, என்னருகே வந்த பால்க்காரர் அங்கே ஒருவன் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டவுடன் பதற்றமடைந்தார். ஓடிச்சென்று அண்ணாச்சியை எழுப்பி வந்தார், நேரம் ஆக ஆக ‌சிறிது சிறிதாக கூட்டம் சேர ஆரம்பித்தது. ‌தூக்க கலக்கத்துடன் வந்தவர்கள் அதிர்ச்சியும், மிரட்சியும் கலந்த முகத்திற்க்கு மாறினார்கள்.

      சுமார் 5.45 மணி,  பொழுது புலம்பும் நேரம், சோகம் அந்த வீதி முழுவதும் பரவியிருந்தது. இதுவரையில்லாத சோகம் எனக்குள்ளும் வேகமாக பரவியது. காரணம், இன்னும் சில நிமிடங்களில் என்னுடைய பார்வை வெளிச்சம் மங்கப் போகிறது. மக்கள் கூட்டம் விசனத்துடனும், யார் செய்திருப்பார்கள் என்பதைப் பற்றிய  ஆராய்ச்சியுடனும் நின்றிருந்தது. நேரில் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற விசாரணையும் சூரிய வெளிச்சத்துடன் கிளம்பியிருந்தது. இச்சம்பவத்தை முழுவதுமாகப் பார்த்த கண் கண்ட சாட்கியாக்கிய நான், என் கண்களை அணைத்துக் கொள்ளப்போகிறேன், என்னிடம் யாரும் வந்து சாட்சி கேட்க்கப் போவதில்லை.


      சரியாக 6.00 மணியளவில் என் பார்வை அணைக்கப்பட்டது அதோடு சேர்ந்து உண்மையும். கண்களை மட்டுமே கொண்ட நான் மௌன சாட்சியானேன் தெரு விளக்காய்.